சென்னை: தமிழ்நாடு லோக்ஆயுக்தா தலைவராக நீதித்துறை உறுப்பினராக இருந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்பினர்கள், நீதித்துறை சாரா 2 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்பினராக உள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ம் தேதி வரை பதவியில் இருப்பார். புதிய உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது – இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.