தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக்கூடிய துரோகிகள். துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். இந்த வளர்ச்சி தான் பலரின் கண்களை கூச செய்கிறது; வயிறு எரிகிறது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர், பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதன் மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடப்பதில்லை. `தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே?’ என்று வடமாநில யூடியூபர்கள் தேடிப் பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, சாதனை திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை தெரிந்துக்கொண்டு நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்குப் பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
பா.ஜ.க ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனால் கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கக்கூடிய மாசடைந்த காற்று, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பா.ஜ.க அரசுகள் கட்டுகிற கட்டடங்கள், மேம்பாலங்கள் எல்லாம் கொஞ்ச நாளிலேயே இடிந்து விழுகிறது. இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க-வினரே இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சிலப்பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரிசெய்கிற முதலமைச்சர் தான், உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு, எந்த கோரிக்கையும் கண்டுகொள்வதில்லை; எந்த விமர்சனத்தையும் நியாயத்தோடு பார்ப்பதில்லை.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு `மூடுவிழா’ நடத்தியிருக்கிறது. வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதிலும் இந்த திட்டம் பெரிய சாதனைப் படைத்தது. ஆனால், அந்த திட்டத்தில் காந்தியின் பெயரை எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை, மக்கள் உரிமை என்று இருந்ததையும் எடுத்துவிட்டார்கள். இதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இப்படியாக ஒன்றிய பா.ஜ.க-வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கூஜா தூக்கக்கூடிய அ.தி.மு.க அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களின் எந்த பொய்யையும் மக்களாகிய நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் `திராவிட மாடல் 2.O’ அமைப்பது உறுதி, உறுதி என்று தொடர்ந்து உரக்கச் சொல்கிறேன். சொன்ன திட்டங்களைவிட அதிகமான அளவு சொல்லாத முத்திரைத் திட்டங்களையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு நம்பர் ஒன்னாகத் தொடர நீங்கள் உதவ வேண்டும்’’ என்றார்.