கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில்… கலைஞர் கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் செம்மொழி வேளிர் ராமநாதன் ஐயா ஆகியோரின் சிலைகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், “கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் கலைஞரின் சிலையையும் சங்கத்தின் முன்னாள் செயலர் செம்மொழி வேளிர் ராமநாதன் ஐயா சிலையையும் உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடியிருக்கிறோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கு அரசு நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடுகிறோம். அதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது இந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
தமிழ் தாய் வாழ்த்து முதன் முதலாகப் பாடப்பட்டது இந்த கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970களில் டாக்டர் கலைஞர் அவர்கள் அந்த தமிழ்த்தாய் வாழ்த்தை `தமிழ்நாடு அரசு வாழ்த்து பாடலாக” அறிவித்தார். இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான். இதற்கு ஒன்றும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டாம் என்று சில கூட்டம் சொன்னது. இன்னும் சில பேர் சட்டக் கூட்டத்தில் இந்தப் பாடலைப் பாடவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய “மாநில பாடல்” என்ற அறிவித்து, அதைப் பாடும்போது அனைவரும் மரியாதை செய்ய வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் டாக்டர் கலைஞர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதிசெய்த இந்தக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வருவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த தமிழ்ச் சங்கத்தின் மீது கலைஞர் அவர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய தீரா பற்று உண்டு.