தயாரிப்பு செலவை ஈடுகட்டவே பாடப் புத்தகங்கள் விலை உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் | Anbil Mahesh explains about the increase in the price of textbooks

1295304.jpg
Spread the love

சென்னை: “பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளி பாடப் புத்தகத்தின் விலை உயர்வு தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 – 19ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11-ம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11-ம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2013 – 14ம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும். ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>> பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *