சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நான் இன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் 1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் கருணாநிதியும், நானும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர், “துரை, இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறாயா?” என்று கேட்டார். “நான் வக்கீலாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்குது” என்று அவரிடம் சொன்னேன். “வேண்டாமா உனக்கு” என்று சொல்லிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டார்.
பின் சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்றேன். அப்போது தயாளு அம்மாள் என்னிடம், “ஏன் சீட்டு வேண்டாம் என்று கூறினாய்?” எனக் கேட்டார். அவரிடம், “செலவு பண்ண முடியாது” என்றேன். “அதெல்லாம் அவர் கொடுப்பார், நீ நில்” என்று சொல்லிவிட்டு ரூ.10 ஆயிரத்தை எடுத்து என்னிடம் தந்தார். நான் எம்எல்ஏவாக, அமைச்சராக, திமுகவின் பொதுச்செயலாளாரக இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள் தான்.” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது அவருக்கு காந்தளூர் சாலை வரையிலே தான் ஆட்சி இருந்தது. ஆனால் அவருடைய மகன் ராஜேந்திர சோழன் தாய்லாந்து வரை தன் ஆட்சியை நிறுவி காட்டியவர். இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள், உதயநிதி ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பதை. இது என்னுடைய அரசியல் கணக்கு” என்றும் குறிப்பிட்டார்.