தற்காலிக ஊழியர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும்: ஐகோர்ட்  | High Court talks on Temporary Employees

1342696.jpg
Spread the love

மதுரை: தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2000-ல் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் முருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடந்த 2002-ல் தேவகோட்டை – திருச்சி பேருந்தை ஓட்டிச்செல்லும் போது காரைக்குடி பர்மா காலனி அருகே பேருந்து மீது சிலர் கல்வீசினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியதில் ராஜேந்திரனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் 2005-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட போது மருத்துவ சான்றிதழ் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி மருத்துவக் குழு முன்பு ஆஜரானபோது கண் பார்வையில் பாதிப்பு இருப்பதால் ராஜேந்திரன் ஓட்டுநர் பணிக்கு தகுதியற்றவர் என சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பணி நீக்கத்தை ரத்து செய்யவும், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் தனக்கு மாற்றுப்பணி வழங்கக் கோரியும் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை தனி நீதிபதி விசாரித்து, தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் (சம வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு) 1995 பொருந்தும். அதன்படி மனுதாரரை மீண்டும் பணியி்ல் சேர்த்து மாற்றுப் பணி வழங்க வேண்டும் என 6.10.2023-ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், திருச்சி கிளை மேலாளர் ஆகியோர் மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மனுதாரர் தற்காலிக பணியாளர் தான். தற்காலிக பணியாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தாது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிடுகையில், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-ன் பிரிவு 47-ல் பணியிலிருக்கும் போது மாற்றுத் திறனாளியாகும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் ஊதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்படி மனுதாரரரை மீண்டும் பணியில் சேர்த்து மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் சாட்டத்தில் கூறப்பட்டுள்ள பணியாளர்கள் என்பது தற்காலிக பணியாளர்களையும் உள்ளடக்கியது தான் என உயர் நீதிமன்ற அமர்வு 2017ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்தக்காரணமும் இல்லை. எனவே மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *