“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” – இது ’திமுக 75 – அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது.
இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? – திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு:
“குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.”
இது தந்திரமா? – “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர்.
இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள்.
அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது.
விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார்.
எப்படி உருவானது இந்த வெற்றிடம்? – “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர்.
அவர் கூறியதாவது: “திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது.
இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும்.
இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார்.
‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்…’ – தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும்.
“ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா?
அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம்.