தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரின்போது, சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், தமிழகத்தின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட அவைத் தலைவர் அப்பாவு, நாட்டின் தலைநகர் புது தில்லியை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இதற்கு பதிலளிக்கும்போது, வாய்ப்பு வரும்போது கொண்டுவரப்படும் என்றதைக் கேட்ட எம்எல்ஏக்களின் சிரிப்பலையால் பேரவை அதிர்ந்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தலைநகரை மாற்றுவது குறித்து வைத்த முன்மொழிதல்கள் அவையில் ருசிகர விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.