ராமேசுவரம்: ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துறைமுக அலுவலக கட்டிடத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தொடர்ந்து ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் ஓலைகுடா சாலையில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் மூலம் படகு இல்லம், அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: சிறு துறைமுகங்கள் துறை மூலம் ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு பயன்பெறும் வகையில் தற்பொழுது ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ராமேசுவரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது. பாம்பன் கால்வாய் தூர் வாருதல் தொடர்பாக விரைந்து மத்திய அரசிடம் நிதியை பெற்று கால்வாய் ஆழத்தை தூர்வாரி மீனவர்கள் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்ததில், பாம்பன் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைய அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்ததால், மாற்று பாதையில் புதிய பாம்பன் சாலை பாலம் அமைப்பதற்கான திட்ட பணிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை (அப்துல் கலாம் நினைவிடம்) பகுதியிலிருந்து அக்னி தீர்த்தம் கடற்கரை வரை சுமார் 6.கி.மீ தூரம் புறவழிச்சாலை அமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி இடங்கள் எடுப்பதற்கும் ரூ.70 கோடி வழங்கி சாலை அமைத்திடவும் என மொத்தம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகிறது.
ராமேசுவரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூன்று தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 50 படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை மையம், சிறப்பு சிகிச்சை மையம், ரத்த வங்கி, ஆய்வுக்கூடம், புறநோயாளிகள் காத்திருப்பு கூடம், மருந்தகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நான்காயிரம் கோடி கடன் வாங்கியது தான் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ வேலு, “ஒரு அரசாங்கம் சமூகப் பணிகளை செய்யும் போது கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த போது கடன் வாங்கவே இல்லையா? எந்த ஒரு அரசும் மக்களின் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கடன் வாங்கும்தான். தமிழக அரசு கடனை கட்டுக்குள் வைத்துள்ளது” என்று அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல் சார் வாரிய முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர் முத்து ராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.