Last Updated:
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் குழுவினர் 5 மாநிலங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி, அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் அவரது குழுவினர் ஒவ்வொரு மாநிலமாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அசாம், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆய்வு நிறைவடைந்த நிலையில், வரும் வியாழக்கிழமை இரவு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேரளா செல்கிறார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரள தலைமைச் செயலாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு, அடுத்த வாரம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மேற்குவங்கம் செல்லும் ஞானேஷ் குமார், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் அடுத்த வாரத்திற்குள் ஆய்வு நிறைவடைய உள்ள நிலையில், வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேற்குவங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
