“பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியின் அமோக வெற்றிக்கு முக்கியக் காரணம், பெண்களுக்கான நிதி உதவித் திட்டங்களே. 75 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் நேரடி உதவி, அவர்களின் வாக்குகளை நிதிஷ் பக்கம் திருப்பியது. இந்தமுறை, 71.6% பெண்கள் வாக்களித்ததே அதற்குச் சான்று…”
26.11.25 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் இவை, அதே கட்டுரையில், ‘இந்த அரசியல் வியூகம் தமிழகத்தையும் தாக்கலாம் என்று எச்சரித்திருந்தோம். இன்று, அது நிஜமாகியுள்ளது.
தமிழக அரசு பெண்களுக்கு வழங்கிய 5,000 ரூபாய் உதவித்தொகை குறித்து எதிர்ப்பேதும் இல்லை நமக்கு. தகுதியான ஏழை மகளிருக்கு அது உதவியாக இருந்தால் நல்லதே. ஆனால், அது அரசின் தனிப்பணம் அல்ல, நிதிஉதவி பெறாத மக்களும் சேர்ந்து அரசுக்குச் செலுத்திய வரிப்பணம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அள்ளித் தருவது எளிது. ஆனால், ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ள மாநில நிதியில் மேலும் சுமை சேர்ப்பது எந்த நிதி ஒழுங்கு என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் பலனுக்காக பொது நிதியைப் பயன்படுத்துவது அரசியல் புத்திசாலித்தனமா. இல்லை பொருளாதாரப் பொறுப்பின்மையா என்பதையும் கேட்க வேண்டியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்ட பின், அதை ஈடு செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறது தமிழக அரசு? அரசின் வருவாய் அளவை உயர்த்துவது எப்படி? செலவுக் கட்டுப்பாடு திட்டங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத்தெளிவான பதில்கள் தரப்பட வேண்டியது அவசியம்.
பொது நிதி, அரசியல் ஆயுதமாக மாறும்போது, அதன் விலையை யார் கொடுப்பது? அது ஒவ்வொரு தமிழனின் தலையில்தான் விடியும்!
