ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில் நைச்சியமாகப் பேசும் விதம், நான்கு திசைகளிலும் பிரச்னைகள் வலுக்க, பரபர டென்ஷனோடு ஓடும் முகம், பலத்த சிரிப்போடு மெசேஜ் உணர்த்தும் பக்கம் என நடிப்பில் பன்முகம் காட்டி வாகை சூடுகிறார் ஜீவா. வெல்டன் தலைவர் தம்பி! ஆனால், ஊர் பக்கம் நிகழும் கதைக்களத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் சென்னை வட்டார வழக்கைத் தடுத்து நிறுத்தியிருக்கலாமே?! திருமணம் நின்றுவிடுமோ, மணி நினைத்ததைச் சாதித்துவிடுவாரோ எனப் பயத்தில் பதைபதைப்புடன் சுற்றும் இளவரசு அவருக்கென தைக்கப்பட்ட அளவு சட்டையில் சரியாகப் பொருந்திப் போயிருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரரிடம் பகைக் கொண்டு ரகளைகள் செய்யுமிடம், நாக்கை துருத்திக் கொண்டு சாமியாடும் இடம் என வழக்கமான தம்பி ராமையா தென்பட்டாலும், தன் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்தைச் சுவாரஸ்யமாக்கி இருக்கிறார். அப்பாவின் உடல் முன் அவருடனான நினைவுகளைப் புரட்டி அப்பாவித்தனத்துடன் இவர் அடிக்கும் ஒன்லைனர்கள் அடிப்பொலி காமெடி எபிசோடு!

சுற்றியிருக்கும் ஆண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்ணாக பிரார்த்தனா நாதன் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். “எனக்குக் கல்யாணம் நடக்கிறது உங்களுக்கு முக்கியமில்ல. இங்க உங்களுக்குப் பகைதான் முக்கியம்’ என வசனம் பேசுமிடத்தில் படம் பேசும் மையக்கருவை உணர்த்தி சிந்திக்கவும் வைக்கிறார். இவர்களைத் தாண்டி பதவி ஆசையுடன் சுற்றும் ஜென்சன் திவாகர், கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேசும் சர்ஜின் குமார், மாப்பிள்ளையாக சுபாஷ் கண்ணன், ராஜேஷ் பாண்டியன் ஆகியோர் படத்தின் ‘ஹா ஹா’ பக்கங்களை வெற்றிகரமாகக் கரை சேர்க்கும் துடுப்புகளாக மிளிர்கிறார்கள்.