மதுரை மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால், மதுரை திமுகவினர் விரக்தியடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் பொன் வசந்த் சிறைக்கு சென்றதால் மேயராக இருந்த இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, மேயர் பதவியை கட்சித்தலைமை பறித்தது. அவருக்கு பதிலாக புதிய மேயரை தேர்வு செய்வதற்கு திமுகவினர் இடையே ஒற்றுமையில்லாததால் புதிய மேயரை கட்சித்தலைமையால் உடனடியாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால், புதிய மேயர் தேர்வை, திமுக தலைமை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சித்தலைமையின் இந்த முடிவுக்கு கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் கலந்து வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக மூத்த கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘ தேர்தல் நேரத்தில் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும் எனக் கருதி, கட்சித்தலைமை மேயர் இந்திராணி பதவியை பறித்தது. ஏற்கெனவே புறநகர் மாவட்ட திமுகவில் அமைச்சர் பி.மூர்த்தி கை ஓங்கிய நிலையில், தற்போது அவரது ஆதரவு கவுன்சிலர் வாசுகியை மாநகராட்சி மேயராக கொண்டுவர முயற்சி செய்கிறார்.
வாசுகியை கொண்டுவந்தால் மாநகர திமுகவிலும் அவரது கை ஓங்கிவிடும் என மாநகர திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்ற திட்டமிடும் திமுக பி.மூர்த்தியின் தேர்வை ஆதரித்தாலும், அதை உடனடியாக கொண்டுவர தயங்குகிறது.
மாநகர திமுகவினர், மூர்த்தி சொல்பவர் வரக்கூடாது என்பதற்காக, மேயர் இந்திராணியின் சமூகத்தை சேர்ந்தவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றனர். இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்த அமைச்சர் கே.என்.நேருவால் தீர்வு காண முடியவில்லை. இந்த சூழலில் கட்சித் தலைமை புதிய மேயர் நியமனத்தை 3 மாதங்களுக்கு தள்ளிப்போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையின் இந்த முடிவு, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியைச் சேர்ந்த துணை மேயர் மாநகராட்சியில் அதிகாரத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அவரது தலையீடு நிர்வாகத்தில் அதிகரித்தால் திமுக கவுன்சிலர்களால் செயல்பட முடியாத சூழல் உருவாகும். இது நேரத்தில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். புதிய மேயர் தேர்வை தள்ளிப்போடாமல் உடனடியாக நியமிக்க வேண்டும்’’ என்று கூறினர்.