தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிஹார் தேர்தல் வெற்றியால் பாஜக மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தொண்டர்களுக்கு இந்த வெற்றியால் புது சக்தி கிடைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பார்வை அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.
இதற்கிடையே, 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்கள், வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு இந்த இரண்டும் காங்கிரஸ் கட்சியினரின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது.. பிஹார் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை. இப்போது கேட்கும் நிலையிலும் இல்லை. அது கிடைக்கும் நிலையிலும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, மேற்கண்ட இரண்டையும் தருவதற்கு தயாராக உள்ள தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘தமிழகத்தில் காங்கிரஸுக்கு 70 இடங்கள், விஜய்க்கு ஆட்சிப் பொறுப்பு. புதுச்சேரி, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி’ என்று பேசி முடிக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ‘‘தவெக தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பேசவில்லை. அப்படி பேச வேண்டும் என்றால் கிரிஷ் சோடங்கர்தான் பேச வேண்டும். அதுபோல தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவரும் உறுதிபட தெரிவித்துள்ளார். எனவே, அது வதந்தி’’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, சிவகங்கையில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. எஸ்ஐஆருக்கு எதிராக விஜய் கட்சி போராடியதை வரவேற்கிறோம். பிஹார் தேர்தலில் தோற்றது காங்கிரஸ் அல்ல; ஜனநாயகம்தான் தோற்றது. தமிழகத்தில் ஜனநாயகம் தோற்க வாய்ப்பில்லை. அதற்கு காவலாக ஸ்டாலினும், கூட்டணி கட்சிகளும் உள்ளன.
ராகுல் வந்த பிறகு காங்கிரஸ் தொடர் தோல்வி அடைந்து வருவதாக பாஜக கூறுகிறது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைந்தன. கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் பாஜக தோற்றுள்ளது. வெற்றி – தோல்வி இரண்டையும் சமநிலையுடன் தான் காங்கிரஸ் பார்க்கும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. எந்த இடத்திலும் நான் கேட்கவும் மாட்டேன். சிலர் தங்களது விருப்பத்தை கூறினர். அதைத்தான் வெளிப்படுத்தினேன்’’ என்றார்.