தவெகவுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்? – மாணிக்கம் தாகூர் நேர்காணல் | congress manickam tagore interview

Spread the love

காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்” என்ற கருத்தை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

கூட்டணிக்காக காங்கிரஸ் செய்திருக்கும் தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாகச் சொல்லி இருக்கிறீர்களே..?

​காங்​கிரஸை பொறுத்​தவரை உறவுக்கு மதிப்​பளிக்​கும் கட்​சி. அதனால் தான் இழப்​பு​கள் வந்​த​போது​கூட பல தியாகங்​களைச் செய்​திருக்​கி​றோம். அதேசம​யம், காங்​கிரஸ் பலமான கட்​சி. கட்சி தலை​மை​யின் பெயரில் அந்​தக் கட்​சிக்​காக தமி​ழ​கத்​தில் விழும் வாக்​கு​கள் மிக முக்​கிய​மானது. ஆனாலும் 2004 முதல் (2014 தவிர) திமுக கூட்​ட​ணி​யில் தொடரும் காங்​கிரஸ், அமைச்​சர​வை​யில் சேரு​வதற்​கான சூழல் அமைந்த போதும் அதை தவிர்த்​திருக்​கிறது. இந்​தத் தியாகமெல்​லாம் தான் போதும் என்​கிறேன்​.

அப்படியானால் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்பீர்களா?

​காங்​கிரஸ் தொண்​டர்​களின் கோரிக்கை அது​வாகத்​தான் இருக்​கிறது. பல மாநிலங்​களில் அமலாக்​கத்​துறை, சிபிஐ மூலம் நெருக்​கடிகளை கொடுத்து கட்​சிகளை உடைத்து ஆட்​சிகளை கவிழ்த்​தது பாஜக. அது​போல் நடந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக 2021-ல் திமுக தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்​றி​பெற அதி​க​மான தொகு​தி​களில் போட்​டி​யிட வேண்​டிய அவசி​யம் இருந்​தது. அதற்​காக அப்​போது காங்​கிரஸ் தியாகம் செய்​தது.

மீண்டும் 25 தொகுதிகள் தான் தருவோம் என்று திமுக சொன்னால் என்ன செய்வீர்கள்?

அத்தகைய முடிவை எடுக்கும் இடத்தில் நான் இல்லை. அதுபற்றி அகில இந்திய தலைமையும் மேலிடப் பார்வையாளர்களும் முடிவெடுப்பார்கள்.

தவெக-வுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்?

இத்தகைய முடிவுகளை எல்லாம் அகில இந்திய தலைமை தான் எடுக்க முடியும். அதைத் தாண்டி வரும் செய்திகள் எல்லாம் வெறும் ஊகங்களாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை, திமுக-வுடனான இண்டியா கூட்டணி பலமாக இருக்கிறது.

திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பவர்களில் நீங்கள் முன்னணியாமே..?

இல்​லை. காங்​கிரஸ் அதிக இடங்​களில் போட்​டி​யிட வேண்​டும்​… காங்​கிரஸாருக்கு அதி​க​மான அதி​காரங்​கள் கிடைக்க வேண்​டும் என்று நினைப்​பவர்​களில் ஒரு​வ​னாய் நான் இருக்​கிறேன்​.

தவெக கூட்டணி அமைந்தால் காங்கிரஸுக்கு 60 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறார்களே… காங்கிரஸில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

​காங்​கிரஸ் கட்சியில் எப்போதுமே வேட்பாளர்​களுக்கு பஞ்சம் இருந்​த​தில்லை. காங்கிரஸில் சாமானியர்​களுக்கும் வாய்ப்​பளிக்கப்படு​கிறது. அதில் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்​கிறது; பலருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்​கிறது.

வேட்பாளருக்கு பஞ்சமில்லை என்றால், 2019-ல் எதற்காக ஈவிகேஎஸ்ஸை தேனியில் இறக்குமதி செய்தீர்கள்?

அவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாகவும், தன்மானமுள்ள காங்கிரஸாருக்கு தைரியம் கொடுக்கும் தலைவராகவும் இருந்தவர். அவர் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், அவரது ஈரோடு தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அதுவுமில்லாமல், தேனியில் அண்ணன் ஆரூண் உடல் நிலை காரணமாக போட்டியிட முடியாததால் அங்கே ஈவிகேஎஸ் நிறுத்தப்பட்டார்.

கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சி பதவிகளில் திமுக தங்களை உதாசீனம் செய்வதாக கீழ்மட்ட காங்கிரஸாருக்கு ஒருவிதமான புழுக்கம் இருக்கிறதே?

மிகப்​பெரிய அளவில் இருக்​கும் நியாய​மான புழுக்​கம் அது. 10 பேர் எம்பி ஆவதற்​காக​வும், 15 பேர் எம்​எல்ஏ ஆவதற்​காக​வும் மட்​டுமே கட்சி நடத்த முடி​யாது. ஆனால், இதையெல்​லாம் பொது​வெளி​யில் பேசுவதை​விட, கூட்​டணி அமை​யும் போது காங்​கிரஸ் தலைமை இதை சரி​யான விதத்​தில் பேசி​முடிக்க வேண்​டும்​.

தமிழக காங்கிரஸார் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அனைத்தையும் ராகுலிடம் பேசி சரிசெய்துவிடும் திமுக என்கிறார்களே?

ராகுல் காந்தியை பொறுத்தமட்டில் தொண்டர்களின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பவர். அதுதான் அவரது ஸ்டைல் ஆஃப் பாலிடிக்ஸ். இதை தமிழகத்திலும் பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பார்வை தொண்டர்களின் பார்வையாகத்தான் இருக்கும்.

தொண்டர்கள் விஜய் கூட்டணியை விரும்புகிறார்கள் என்பதால் தான் ராகுல் காந்தியும் விஜய்யுடன் டச்சில் இருக்கிறாரோ?

அது எனக்குத் தெரியாது. கரூர் சம்பவத்தின் போது விஜய்யிடமும் முதல்வரிடமும் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். அதுவும் ஆறுதல் சொல்வதற்காகப் பேசியதாக எங்களுடைய மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். அதை அப்படியே நானும் ஏற்கிறேன்.

தமிழகத்தில் பாஜக அளவுக்கு காங்கிரஸ் வளர்ந்திருக்கிறதா?

பாஜக வளர்ந்திருக்கிறது என்பது ஒரு பொய்யான தோற்றம். ஆனால், காங்கிரஸுக்கு மற்ற தோழர்களை அழித்து கட்சியை வளர்க்கும் பழக்கம் கிடையாது. விட்டுக் கொடுப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வேலையாக இருக்கிறது. பாஜக-வை பொறுத்தவரை இது ரிவர்ஸாக இருக்கிறது. கூட்டணியோடு மாநிலத்துக்குள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை அடித்துச் சாப்பிடும் தந்திரமெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியாது. எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசை எதிர்க்கிறோம். கூட்டணி தர்மத்துக்காக பல வகைகளில் மாநிலத்தில் மவுனமாக இருக்கிறோம். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு வேக வளர்ச்சி கிடைக்க மறுக்கிறது.

விஜய்யை நம்பி திமுக உறவை முறிப்பது காங்கிரஸுக்கு நல்லதா?

அதை தலைமை தான் முடிவுசெய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமுகமாகவே இருக்கிறது.

ஆட்சியில் பங்கு என்பதில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?

இதுபற்றி பொதுவெளியில் பேசவேண்டாம் என்று எங்களின் மேலிடப் பார்வையாளர் உத்தரவிட்டிருக்கிறார். அதை மீறுவது நியாயமில்லை என நினைக்கிறேன்.

செல்வப்பெருந்தகையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என நீங்களும் தலைமைக்கு அழுத்தம் தருகிறீர்களாமே?

கற்​பனை​யான தகவல். கார்​கே​யும், ராகுல் காந்​தி​யும் யாரை தலை​வ​ராக நியமிக்​கி​றார்​களோ அவர்​களோடு பயணிப்​பது தான் என்​னுடைய பழக்​கம். அவர்​களுக்கு எதிர்ப்​பாக நான் எதை​யும் பேச​மாட்​டேன்​.

பிஹாரில் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்திருக்கிறதே..?

இது எஸ்​ஐஆ​ரால் கிடைத்த வெற்​றி. கடந்த தேர்​தலில் எங்​கெல்​லாம் காங்​கிரஸ், ஆர்​ஜேடி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் 20 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​ற​ன​வோ, அங்​கெல்​லாம் சுமார் 30 ஆயிரம் வாக்​கு​களை தந்​திர​மாக நீக்கி இருக்​கி​றார்​கள். இதை தேர்​தல் ஆணை​யம் சிஸ்ட்​டமேட்​டிக்​காக செய்​திருக்​கிறது. இந்த நிலை​யில், தமி​ழ​கத்​தில் அதி​முக எஸ்​ஐஆரை ஆதரிப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *