திருச்சி: தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திருச்சியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தவெக கரூர் கூட்டத்தில் உயிரிழந்த பலர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அஸ்ரா கார்க் நேர்மையான ஆளுமை மிக்க அதிகாரி. உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அதை கண்காணிக்க முன்னாள் நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் குழுவும் அமைத்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பின் சிபிஐ, அமலாக்க துறை, வருமானவரி துறை ஆகியவற்றை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் விசாரித்து ஒரு நியாயம் கூட கிடைக்கவில்லை. சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழுவில் ஒருவராக அஸ்ரா கார்க் இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் எனக்கு சிறு நெருடல் உள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணையை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தீர்ப்பில் இல்லை. மாதம் ஒருமுறை சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. அப்படியெனில் இந்த விசாரணை முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. தமிழக அரசு இந்த விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்க வேண்டும். இது ஒரு இடைக்கால உத்தரவு தான்.
பாஜக தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பயன்படுத்த வாய்ப்புள்ளது. பாஜகவின் டிராக் ரெக்கார்டு அதுதான். பாஜகவின் கீழ் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியும் என நாம் நினைக்க முடியாது. தவெகவும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. இது போன்ற சூழலில் பாசிச சக்தியை எவ்வளவு தூரம் வலிமையாக தவெக எதிர்க்கிறது என்பதற்கான அரசியல் ரீதியான சவாலாக அவர்களுக்கு இது இருக்கும் என நினைக்கிறேன். அண்ணாமலை கூறுவதுபோல தமிழகத்தில் சிபிஐ-யை வைத்து யாரும் அரசியல் செய்வதில்லை. சிபிஐயை வைத்து பாஜக தான் இந்தியா முழுவதும் அரசியல் செய்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவின் டீம். அதனால் எங்களுக்கு அதன் மீது ஓர் அச்சம் உள்ளது” இவ்வாறு ஜோதிமணி பேசினார்.