புதுடெல்லி: தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது: தவெக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் நான் தொடர்ந்த வழக்கு. பிறர் வழக்கு தொடர்ந்தது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
எங்கள் தரப்பு கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று கோரிக்கைகள் வைத்திருந்தோம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும், அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இது மூன்றுமே எங்களுக்கு சாதகமானது.
கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. காவல்துறை சொன்ன இடத்தில் தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அதேபோல், விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்துக்குள் தான் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.
கரூருக்கு நாங்கள் வந்தபோது, கரூர் காவல்துறை எங்களை வரவேற்றது. வழக்கத்துக்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாது, கரூரில் மட்டும் எங்களை காவல்துறை வரவேற்றது ஏன்?.
எங்கள் தொண்டர்கள் மீது ஏதோ தீவிரவாதிகள் போல் போலீஸார் தடியடி நடத்தினர். கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். நாங்கள் அப்பவும் கூட கரூர் எல்லையில் தான் இருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரமாகிவிடும் என்று சொன்னதால் தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை.
தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனால் நாங்கள் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்தெடுக்கப் போகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். அவர்களோடு இணைந்து போராடுவோம்.” என்றார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (அக்.13) வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.
இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது. வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தியது.