தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் | TVK is not a recognized party Election Commission informs High Court

1380093
Spread the love

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் தவெகவினரின் அஜாக்கிரதையாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு, உயிர்பலி நேர்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் பெயரை சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்; அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும்; இந்த விதிகளை மீறிய தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினர் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்; உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தவெக தலைவர் விஜய்-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும், உச்ச நீதின்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *