செல்வப்பெருந்தகை கருத்து!
இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது” என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி – சபரீசன் சந்திப்பு
காங்கிரஸ், தவெகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்தையில் ஈடுபடுகிறது என்று பேச்சுகள் எழும் நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சபரீசன் டெல்லியில் நேரில் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இது குறித்து நாம் விசாரித்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணிகளுக்கு நெருக்கமான சிலர், “பீகார் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் சில ஆப்ஷன்களை மனதில் வைத்திருந்தது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தரப்பை ரொம்பவே பாதித்துள்ளது. அதன் காரணமாக தமிழக தேர்தல் தொடர்பான பணிகளை வேகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தான் குழு அமைத்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணியை உறுதி செய்தது.
இதனிடையே தான் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து தமிழக அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது. இதனால், தமிழக அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணி விரும்புவதாகவும், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் டெல்லி சென்ற சபரீசன் நேரடியாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணி விஷயத்தில் டெல்லி காங்கிரஸின் ஆப்ஷனும் திமுக தான் என்பதை இதன் மூலம் அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள்.