மேடைகளில் 31% அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கம்பு சுற்றினாலும், குறைந்தபட்சமாக 20% வாக்குகளாவது தங்களுக்கு கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமென நம்புகிறார்கள். காரணம், விஜய்யே ஒரு கிறிஸ்தவர், சிறுபான்மையினர்.
ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வக்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் ஸ்பெசலாக செய்திருக்கவில்லை.
இந்த சமயத்தில்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறை மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீண்டும் தன்னுடைய பலத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டது. மேலும், முதல்வர் தலைமையிம் ஒரு மெகா கிறிஸ்துமஸ் விழாவையும் திட்டமிட்டு திருநெல்வேலியில் சிறப்பாக நடத்தி முடித்தனர்.