கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தவெக வழக்கறிஞர், மின் வாரியத்தினர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.