கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்), கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 16-ம் தேதி இரவு கரூர் வந்தனர். அவர்கள் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் மீண்டும் கரூர் திரும்பினர்.
இதற்கிடையே, சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழுவில், தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளான எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி சுமித் சரண், டெல்லி ரிசர்வ் போலீஸ் படை ஐஜி சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் விரைவில் கரூர் வந்து சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உள்ளனர்.
இந்நிலையில், கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஓர் ஆவணத்தை தாக்கல் செய்வதற்காக சிபிஐ ஆய்வாளர் மனோகர் நேற்று முன்தினம் வந்தார். ஆனால், மாஜிஸ்திரேட் பரத்குமார் 3 நாட்கள் விடுப்பில் உள்ளதால், 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சார்லஸ் ஆல்பர்ட்டிடம் அந்த ஆவணத்தை அவர் ஒப்படைத்தார். எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்), நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.