கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பிரச்சார வாகனத்தின் கேமரா பதிவு, ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கரூரில் தவெக பிரச்சாரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக பிரச்சார வாகனத்தில் இருந்த கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை அளிக்குமாறு, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சம்மன் அளித்திருந்தனர். இதையடுத்து, கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகளிடம், சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தவெக வழக்கறிஞர் அரசு, பனையூர் அலுவலக உதவியாளர் குருசரண் உள்ளிட்டோர் நேற்று ஒப்படைத்தனர். தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் கடந்த 3 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.