தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வியாழக்கிழமை காலை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2026 சட்டப் பேரவைத் தோ்தலை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலா் புஸ்சி ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் காலை 6 மணிக்கு பனையூர் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த திங்கள்கிழமை பனையூர் அலுவலகத்தில் மஞ்சள் நிற கொடியில், வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த கொடியை நிர்வாகிகள் கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்த காட்சிகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.