சென்னை: கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், “விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள்” என்று விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அதன்பின்னர், விஜய் கரூர் நெரிசலில் உயிர்ழந்தோர் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார்.
இந்தச் சூழலில், தற்போது, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.