சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இத்தனை நாட்கள் இருந்தோம். நம் சொந்தங்களின் நலன் கருதி மவுனம் காத்தோம். அமைதியாக இருந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலை பின்னப்பட்டு, அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. இவற்றை சட்டம், சத்தியத்தின் துணையுடன் துடைத்தெறியப் போகிறோம்.
அரசியல் செய்ய விருப்பம் இல்லை என்று அடிக்கடி சொல்லும் முதல்வர் ஸ்டாலின், நம்மைக் குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்துள்ளார். சட்டப்பேரவையில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார்.
இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடுகள் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தன. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நேர்மையற்று, நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வரிடம் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
பொய்களையும், அவதூறுகளையும் அவிழ்த்துவிட்டு, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள், திமுக அரசின் தில்லுமுல்லுகளால் உச்ச நீதிமன்றத்தில் திணறியதை முதல்வர் மறந்துவிட்டாரா? கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தையே அவமதிப்பது போல, அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? இதையெல்லாம் மறந்து, சாமர்த்தியமாக பேசியிருக்கிறார் முதல்வர். 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பவர் இப்படி பொய் பேசலாமா? உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?
மனிதாபிமானம், அரசியல், அறம், மாண்பு எதுவுமே இல்லாமல், வெறும் பேச்சால் அரசியல் ஆட்டத்தை ஆடத் தொடங்கி விட்டார் முதல்வர். நான் கேட்ட கேள்விகளை, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் இதைப்புரிய வைப்பார்கள்.
நமக்கு வந்த இடையூறுகள் தற்காலிகமானவைதான். அனைத்தையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் களத்தில் நிற்போம். 2026-ல் இரண்டு பேருக்குத்தான் போட்டி. ஒன்று தவெக. இன்னென்று திமுக. இந்தப் போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி வாகை சூடுவோம். புதிய வரலாறு படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
12 தீர்மானங்கள்…. தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் கே.ஜி.அருண் ராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கரூரில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும்.
தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வேண்டுமென்றே பாதுகாப்பு அளிக்காதது கண்டிக்கத்தக்கது. விஜய்க்கும், அவரைக் காணவரும் பொதுமக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக தொழில் துறை முதலீடுகள், அவற்றால் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விஜய் தலைமையில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை சந்திப்பது. தவெக தலைமையிலான தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது. கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.