தவெக தலைவர் விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் ? : புதுச்சேரி கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு – Kumudam

Spread the love

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச.9) நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்முறையாக விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், க்யூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை பிரதான நுழைவு வாயிலை கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் உள்ளே வரும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டனர்.

அப்போது, அவரது இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் கேட்டது. அவரை சோதனையிட்ட போலீஸார், அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை தனிமைப்படுத்திய காவல் துறை அதிகாரிகள், கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

இந்த தகவல் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த தவெக தொண்டர்கள் மத்தியில் பரவியது. விஜய் உயிருக்கு ஏதோனும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என தவெக தொண்டர்கள் அச்சம் அடைந்தனர். 

இதனிடையே கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளிட்டவை குறித்தும், பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள் என்பது குறித்து மூத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் விசாரணை மேற்கொண்டனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. சிவகங்கை மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார்.

டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்தததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவத்தால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *