தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: ஜேசிடி பிரபாகர் இன்-செங்கோட்டையன் அவுட்   – Kumudam

Spread the love

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தேர்தல் தயாரிக்கும் குழுவை திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்து, இந்த குழுக்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  ‘தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிறு குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் தேவைகளையும் அறிந்து தரவுகளை பெற உள்ளது.

அவர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்ய உள்ளது.

தேர்தல் அறிக்கை குழு விவரம்: கே.ஜி.அருண்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டி.எஸ்.கே.மயூரி, ஏ.சம்பத்குமார், எம்.அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், டி.கே.பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா, எம்.சத்ய குமார்.

மேற்கண்ட குழுவினருக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு இந்த குழுவில் இடம் அளிக்கப்படவில்லை. அதே நேரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் குழுவில் இடம் பெற்றுள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *