செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் டெல்லிக்கு சென்றார்.
டெல்லியில் விஜய்யின் ஆதரவாளர்கள் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்காக, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், ஒரு சிறிய அளவிலான ரசிகர்கள் குழு சிபிஐ வளாகத்திற்கு அருகில் கூடியது.
அதைத் தொடர்ந்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்’ என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.