தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு: சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கரூர் வருகை | Karur stampede: SIT to visit the place and start inquiry

1378757
Spread the love

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (அக்5-ம் தேதி) கரூர் வருகிறது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அன்றைய தினம் இரவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை அறிவித்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், உயிரிழந்தர்கள் குடும்பங்களை சந்தித்து 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், மற்றொரு நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 112 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் திருச்சி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வழக்கில் முதலில் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி வி.செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவரை மாற்றிவிட்டு ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நேற்று முன்தினம் அமைத்தது.

இதில் நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று முன்தினமே தயார் செய்யப்பட்ட நிலையில் ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன் கரூரில் இருந்து நேற்று சென்னை புறப்பட்டு சென்று ஐஜி அஸ்ரா கார்க்கிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு இன்று (அக். 5ம் தேதி) கரூர் வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *