தவெக மதுரை மாநாடு.. ஆரம்பமே இப்படியா? 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து! – Kumudam

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21 ஆம் தேதி, வியாழக்கிழமை) மதுரை, பாரப்பத்தியில் நடைப்பெற உள்ளது.

மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்று நண்பகல் நேரம் மாநாட்டுத் திடலில் 100 அடி நீளமுள்ள கொடிக் கம்பம் நிறுவும் பணி நடைப்பெற்றது. கம்பத்தினை சுற்றி 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று கிரேன் பெல்ட் முற்றிலுமாக அறுந்து, கொடி கம்பம் அருகிலிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்த போது, அதன் பாதி பகுதி முற்றிலுமாக முறிந்தது. எதிர்பாராத இந்த விபத்து சம்பவத்தினால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிக்கம்பம் விழுந்ததில் கார் பலத்த சேதமடைந்தது. தற்போது அந்த காரினை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கீழே விழுந்த கொடிக் கம்பத்தை சுற்றி காவலுக்கு தவெக சார்பில் பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வருகைத் தர உள்ளனர்.

இந்நிலையில், புதியதாக கொடிக்கம்பம் கொண்டு வந்து நிறுத்தப்படுமா? அல்லது கொடிக்கம்பம் நடுவது தவிர்க்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நாளை மாநாடு நடைப்பெற உள்ள நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள விபத்தினால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் முன்னதாக வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.

அதைப்போல், “கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தவெக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் காணுமாறும்” தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுக்கோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *