விழுப்புரம்: தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில் தடையில்லா இன்டர்நெட் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் மாநாட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர் .இப்பணிகள் நாளை 24-ம் தேதி மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, மாநாட்டு திடலின் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு அதில் 15 அடி உயரத்தில் 300-க்கும் மேற்பட்ட கம்பங்களில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டது.
மாநாட்டு திடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் என மாநாட்டு திடலை நிர்வகிக்கும் தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கொடிக் கம்பங்களில் குலையுடன் கூடிய வாழை மரங்கள் கட்டப்பட உள்ளது. மேலும், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வசதியாக தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட உள்ளது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த உதவி மையத்தில் மருத்துவர்கள், மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸுடன் தயாராக இருப்பார்கள். குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக சீருடை வழங்கப்பட இருக்கிறது.
மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில் தடையில்லா இன்டர் நெட் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் மாநாட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகும். வெளியூர்களிலிருந்து வரும் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை அடையாளம் காணும் வகையில் மாநாட்டுத் திடலில் விஜய் படம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது” என்றனர்.