தவெக முதல் மாநாடு: தொண்டர்கள் ஆரவாரத்துடன் அதிகாலையில் நடந்த பந்தல் கால் விழா | Pandal inaugration ceremony for TVK first public rally held

1321347.jpg
Spread the love

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிக்காக இன்று (அக்.4) அதிகாலை பந்தல் கால் நடப்பட்டது.

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25-ம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் தலைமையில் சபரீஷ் குருக்கள், சுந்தரேஸ்வர குருக்கள் மந்திரங்கள் சொல்ல மும்மதங்கள் சார்ந்த படங்களை வைத்து மும்மதம் சார்ந்த புனித நீர் தெளித்து பூஜை நடந்தது.

கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இன்று காலை சரியாக காலை 4.50 மணிக்கு மாநாட்டிற்காக சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன் பந்தல் காலை நட்டார். அதைத் தொடர்ந்து தவெக மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நேற்று இரவு பெய்த மழையால் மாநாட்டு மைதானம் சேறும் சகதியுமாக இருந்தது. என்றபோதும் சுமார் 5 ஆயிரம் பேர் அதிகாலை இருட்டு வேளையிலும் சிரமங்களைப் பொருட்படுத்தாது பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதுமிருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அம்மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களிலிருந்து தீர்த்தங்கங்கள் எடுத்துவரப்பட்டு பந்தல் கால் நடும்போது தெளிப்பதற்காக கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து பேசிய தவெகவினர், “குறைந்தபட்சம் பந்தகால் நடும் பகுதியில் இருக்கை, குடிநீர் வசதிகளையாவது செய்து வைத்திருக்கலாம். நாங்கள் பொறுப்புடன் கொண்டு வந்திருந்த புனித நீரைப் பெற்று பந்தல் கால் நடும்போது தெளிக்கக்கூட யாருக்கும் அக்கறை இல்லை. நாங்களே ஆங்காங்கே நின்றபடி கொண்டு வந்த தீர்த்தத்தை தெளித்துவிட்டோம். மொத்தத்தில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கே இப்படி என்றால் மாநாட்டை எப்படி சொதப்பாமல் நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.” என்று ஆதங்கப்பட்டனர்.

இது குறித்து கருத்தறிய புஸ்ஸி ஆனந்த் தங்கி இருந்த தங்கும் விடுதிக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். ஆனால், அங்கிருந்த பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை அடிக்காத குறையாக விரட்டி அடித்தனர். புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட தவெக பொறுப்பாளர் பரணி பாலாஜியை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் சொன்னதற்கு, “5 நிமிடம் அங்கேயே காத்திருங்கள்” என்றார். ஆனபோதும், கடைசிவரை பத்திரிகையாளர்களை மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் யாரும் சந்திக்கவே இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *