மக்களை பட்டியில் அடைத்துவைத்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான அந்த இடைத்தேர்தல் தொகுதியில் இம்முறை யார் போட்டியிடுவது என இப்போதே கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. மாநகர எல்லைக்குள் உள்ள சிறிய தொகுதி, சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இது தனக்குப் பாதுகாப்பான தொகுதியாக இருக்கும் என நினைக்கிறாராம் ‘முத்து’க் கடவுள் ‘மாண்புமிகு’. அதற்காக, இடைத் தேர்தலில் வென்ற ‘நிலா’க்குமாரரை தந்திரமாக தனது தொகுதிக்கு திருப்பிவிட திட்டம் வகுத்து அதற்கேற்ப காய் நகர்த்துகிறாராம்.
எதிர்க் கூட்டணியில் வாசனைத் தலைவரின் கட்சியில் ஏற்கெனவே போட்டியிட்ட இளம் தலைவர் இம்முறை தனக்குத் தான் இந்தத் தொகுதி என்று திடமாக நம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நம்பிக்கையில் தனது வழக்கமான பாணியில் தொகுதியில் மக்களுக்கான நல உதவிகளையும் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டார்.
தங்கள் கூட்டணி தலைவரை ‘மாமா’ உறவுமுறை கொண்டாடும் அந்த இளம் தலைவர், அண்மையில் தங்கள் மாவட்டத்துக்கு கூட்டணித் தலைவர் பிரச்சாரம் வந்த போது, தவெக ஸ்டைலில் தங்கள் கட்சி கொடியையும் தலைவர் கண்ணில் படும்படியாக உயர்த்திப் பிடிக்க ஆட்களை அனுப்பி இருந்தாராம். இவரின் இந்த மூவ்களை எல்லாம் உற்று நோக்கி வரும் கூட்டணித் தலைமைக் கட்சியின் ‘அரசப்’ புள்ளி, “தோற்றுப் போகும் தேர்தலாக இருந்தால் மட்டும் நான்… ஜெயிக்க வாய்ப்பிருக்கும் தேர்தலில் போட்டியிட அவராக்கும்” என தனது ஆதரவாளர்களிடம் குமுறிக் கொட்டிக்கொண்டு இருக்கிறாராம்.