தஷ்வந்த் விடுதலை குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: அன்புமணி | Anbumani slams Dashwant who sexually assaulted and murdered a 6-year-old girl

1379098
Spread the love

சென்னை: 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருப்பது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.

வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்.

தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் சிறுமியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *