தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி? | DMK silence in Rajendra balaji issue

Spread the love

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்ததால் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்தார். அமைச்சர் அந்தஸ்தில் அமர்ந்திருந்தபோது ஸ்டாலினை கடுமையாக ஒருமையில் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாலாஜி. அப்படிப்பட்டவர் கடந்த 2021 தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஒருமுறை சூடுபட்டுக் கொண்டதால் இம்முறை மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.

சிவகாசி தொகுதியில் கடந்த முறைவெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசோகன் இம்முறை மீண்டும் சிவகாசியில் சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் 13,850 வாக்குகள் கூடுதலாக பெற்றதாலேயே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றி சாத்தியமானது.

இந்நிலையில், சிவகாசியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றியதைப் போலவே, இம்முறை சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக-வையும், ராஜேந்திர பாலாஜியையும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிவகாசி ரயில்வே மேம்பால திறப்பு விழாவில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் ரயில்வே மேம்பால திட்டத்துக்காக ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்கவில்லை ராஜேந்திர பாலாஜி” என விமர்சித்தார். ஆனால் காங்கிரஸ் இப்படி பாலாஜியை வாரிக் கொண்டிருக்க, திமுக நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் மவுனமாகவே இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகாசி திமுக சீனியர்கள் சிலர், “ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக தலைவர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்தார். தற்போதும் திமுக அரசையும், சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தையும் விமர்சித்து வருகிறார்.

இம்முறை சிவகாசி தொகுதி மீது அமைச்சர் தங்கம் தென்னரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் ஏனோ ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கும் அளவுக்குக்கூட அதிமுக-வை திமுக-வினர் விமர்சிப்பதில்லை. அந்தளவுக்கு ராஜேந்திர பாலாஜி என்ன மாயம் செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *