சென்னை சோழிங்கநல்லூரில் கடந்த 22 ஆம் தேதி வந்து கொண்டிருந்த சௌந்தரராஜன் என்பவரை ஒரு பெண் நிறுத்தி தவறாக நடக்க தன்னை அழைத்ததாகவும், அப்போது பேசிக்கொண்டிருந்த போதே மேலும், 3 ஆண்கள் மற்றும் 1 பெண், தன்னை சூழ்ந்துக் கொண்டு கத்தியை காட்டி தன்னிடம் இருந்த அரை சவரன் தங்க செயின் மற்றும் பணம் பறித்துக் கொண்டு அதில் ஒருவன் தன்னை High Court மகராஜன் என்றும் தான் தூத்துக்குடியில் பெரிய ரவுடி என்றும், தன்னைப்பற்றி போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.
இது குறித்து சவுந்தரராஜன் 23 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
சோழிங்கநல்லூர் டிஎன்எச்பி சாலையில் வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த High Court மகாராஜன், அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் தனலட்சுமி, ஆகியோரை கைது செய்தனர். இதில் ஐகோர்ட் மகாராஜன் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி.
விசாரணையில் கைதானவர்கள், மீது தமிழ்நாடு முழுவதும் மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கிண்டி மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும், மேடவாக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கொள்ளை வழக்கில் வழக்கறிஞர் ஒருவரிடம் டின்டர் ஆப் (Tinder App) மூலம் பழகி, சுமார் 25 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் காப்பு ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
கடந்த ஒரு வாரம் முன்பு செம்மஞ்சேரி பகுதியில் ஒரு தாசில்தாரிடம் அதே போன்று டின்டர் ஆப் (Tinder App) மூலம் பழகி அவரிடமிருந்தும் சுமார் 25 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் காப்பு ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள், பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது இத்தகைய கடும் நடவடிக்கை தொடரும் எனத் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
