மேடைக்கு மேடை தமிழ்த் தேசியம் பேசி வந்த தலைவி, சில மாதங்களுக்கு முன்னதாக சொந்தக் கட்சி மீதான சோகங்களைச் சொல்லிவிட்டு அந்தக் கட்சியைவிட்டு விலகினார். அடுத்ததாக அவர், தேனாம்பேட்டை கட்சிக்கு தேர்வடம் பிடிக்கலாம் அதற்கான பேச்சு வார்த்தைகளை கடலோர மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பொறுப்பாகச் செய்துவருகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் நடக்காத நிலையில், கட்சி கலரை கொஞ்சம் அழித்துவிட்டு ‘சமூகப் போராளி’ லேபிளை மட்டும் ஒட்டிக் கொண்டு மேடைகளில் முழங்க ஆரம்பித்தார் ‘தலைவி’.
இதற்கு நடுவில் பனையூர் கட்சிக்காக ‘லக்கி நாட்டாமை’யானவர் தனது ஈசிஆர் பங்களாவுக்கு தலைவியின் பிராணநாதனை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “இனியும் நாங்க சும்மா சும்மா வசனம் பேசிட்டு இருக்க முடியாது. மாதா மாதம் எங்களுக்கு ஏதாவது ‘பேட்டா’ தந்தால் உங்களுக்காகவும் பேசலாம்” என்று பிராணநாதன் பிடிவாதம் காட்டியதால், “நாளப் பின்னே பேசலாம்” என்று சொல்லி அவரை நாசூக்காக அனுப்பிவைத்துவிட்டார் ‘லக்கி நாட்டாமை’.
இதனால், இருந்த இடத்தையும் விட்டுவிட்டு வந்த ஆஃபர்களையும் மறுத்துவிட்டு மாற்று வழி தெரியாமல் நின்ற ‘தமிழ்த் தேசிய தலைவி’யை ‘தாமரை’ப் பார்ட்டிகள் தடாலடியாக பேசி தங்கள் பக்கம் ஈர்த்துவிட்டார்களாம். அதனால் தான் ‘தலைவி’ இப்போது, “வாக்கு அரசியலை நோக்கிப் பயணிக்கிறோம்” என மீண்டும் வலைதளங்களில் வசனம் பேச ஆரம்பித்திருக்கிறாராம். இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘தலைவி’யின் பெயரைக் குறிப்பிட்டு, ‘விரைவில் அவர்…’ என தாமரைப் புள்ளிகள் சிலர் தளங்களில் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.