தாம்பரம் மாநகராட்சிக்கு சிட்லபாக்கத்தில் ரூ.43 கோடியில் புதிய கட்டிடம் – நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு | A new building for Tambaram Corporation at Chitlapakkam mk stalin approve

1316176.jpg
Spread the love

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு சிட்லபாக்கத்தில் உள்ள 4.69 ஏக்கர் நிலத்தில், புதிய அலுவலகம் கட்ட ரூ.43.40 கோடிக்கு நிர்வாக அனுமதியளித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம், பல்லவபுரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 5 நகராட்சிகளையும் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சி பகுதிகளையும் உள்ளடக்கி பெரிய மாநகராட்சியாக கடந்த 2021 நவ.3ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இம்மாநகராட்சியின் தற்போதைய பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7,23,017 மற்றும் தற்போதைய மக்கள்தொகை 10,39,842 ஆகும். மேலும், தாம்பரம் மாநகராட்சியுடன் இம்மாநகரையொட்டி அமைந்துள்ள ஊராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் போதிய இடவசதி இல்லாத நிலையில் இயங்கி வருவதால் போதிய வசதிகளுடன் புதிதாக மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமாக உள்ளது.எனவே, தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு சிட்லப்பாக்கம் கிராமத்தில் உள்ள 4.69 ஏக்கர் ‘அரசு புறம்போக்கு’ இடத்தினை மாநகராட்சி பெயருக்கு உரிமை மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.43.40 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இப்புதிய அலுவலக கட்டடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களை கொண்டிருக்கும். மொத்தம் 12,441 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது.

சேலம் மாநகராட்சி: சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள மோட்டார், பம்புகள் மற்றும் மாறும் சுழற்சி கொண்ட இயக்கிகளை மறு சீரமைக்கும் பணியை ரூ.14.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இயக்குதல் மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை மானிய நிதியின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *