`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' – அமைச்சர் ராமச்சந்திரன்

Spread the love

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “யார் நமக்கு நல்லது செய்கிறார்கள், நம்மைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள், நம்மோடு யார் பயணிக்கிறார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மொத்தம் 286 பயனாளிகளுக்கு ₹25 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ₹5 லட்சத்து 38 ஆயிரத்து 313 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 39 மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். மேலும், சூலக்கரை, வெள்ளூர், காரியாபட்டி ஆகிய மூன்று பள்ளிகளுக்குச் சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசியதாவது, “சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறனாளிகள் அதிகமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், திறமையானவர்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மாற்றுத்திறனாளி மக்களுக்கு இந்த அரசு மிகவும் கருணையோடு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டு மட்டும் 540 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம். நம்முடைய முதல்வர் அள்ளிக் கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறார்.

நலத்திட்ட உதவிகள்

பொதுவாக பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு நாங்கள் கையைக் கழுவிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மாட்டோம். ஆனால் நமது முதல்வர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் எல்லா மக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில் மக்களும் அரசும் வசதிகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டனர். பெற்ற தாய், தந்தையரே திருநங்கைகளை ஒதுக்கி வைத்தனர். சமுதாயத்தில் அவர்களது பெயர்களைத் ‘திருநங்கைகள்’ என மாற்றியவர் கலைஞர்தான். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, தற்போது எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். திருநங்கைகள் வெட்கப்படாமல் ‘நாங்களும் இச்சமுதாயத்தில் பிறந்தவர்கள்’ என்று வேலைவாய்ப்பில் வருகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் கலைஞர். தாயாக, தந்தையாக உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் செய்ய முடியாது. அரசாங்கம் என்பது எங்களுடைய நிதிச்சுமைக்கு ஏற்றார் போல்தான் நாங்கள் செய்ய முடியும். எல்லோருக்கும் எங்களால் முடிந்ததை முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *