மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், தாயைக் கொன்ற மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள பகத்சிங்ஜி தோட்டத்தில் 21 வயதான நிலேஷ் கோசாய், தனது தாயாரான ஜோதிபென் கோசாயுடன் வசித்து வந்துள்ளார். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அவரின் கணவரும் மற்ற குழந்தைகளும் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், நிலேஷுக்கும் ஜோதிபென்னுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் தாக்குதல்களும் நடக்குமாம்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையில் நிலேஷுக்கும் ஜோதிபென்னுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்தை அடைந்த நிலையில், ஜோதிபென்னை கத்தியால் குத்த நிலேஷ் முயற்சித்துள்ளார்.
ஆனால், ஜோதிபென் தடுத்ததையடுத்து, அவரை போர்வையால் கழுத்தை நெரித்து, நிலேஷ் கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது தாயைக் கொன்று விட்டதாகக் கூறி, சமூக ஊடகத்திலும் நிலேஷ் பதிவிட்டுள்ளார். அதில், `நான் உங்களைக் கொன்று விட்டேன், அம்மா. என் வாழ்க்கையை இழந்து விட்டேன். மன்னித்து விடுங்கள், அம்மா. நான் உங்களை மிஸ் செய்கிறேன். ஓம் சாந்தி.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிலேஷின் உறவினர் ஒருவர், நிலேஷின் சமூக ஊடகப் பதிவைக் காவல்துறையிடம் காண்பித்துள்ளார். இதனையடுத்து, நிலேஷின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், ஜோதிபென்னின் சடலத்துடன் நிலேஷ் இருப்பதைக் கண்டு, அவரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், நிலேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், ஜோதிபென் கடந்த சில நாள்களாக மருந்து உட்கொள்ளாதது தெரிய வந்தது. இதனால்தான், அவரது மனநலம் மோசமானதாகக் கூறப்படுகிறது. நிலேஷிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜோதிபென்னின் சடலத்தை பெற்றுக்கொள்ள, அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.