தாய்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – தாய்லாந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நன்னாபட் கொஞ்சரியோன்கை 52 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் கவிஷா திகாரி 2 விக்கெட்டுகளும், சுகந்திகா, அச்சினி, சாமரி அதபத்து, இனோஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே, கேப்டன் சாமரி அதபத்து ஆகியோர் பந்தை சரமாரியாக விளாசி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
11.3 ஓவர்களின் முடிவில் 94 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணித் தரப்பில் விஷ்மி குணரத்னே 1 சிக்ஸர், 4 பௌண்டரிகளுடன் 39 ரன்களும், கேப்டன் சாமரி அதபத்து 4 சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் 49 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை, வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.