“வாழ்க்கையில் எல்லா பெரிய மாற்றங்களும் பெரிய முடிவுகளால் வரணும்னு அவசியம் இல்ல. சில நேரங்கள்ல, திக்கு தெரியாமல் நிக்கிற ஒரு தருணத்தில் எடுக்குற சின்ன முடிவு வாழ்க்கையவே மாத்தும். அந்த முடிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது என் மனைவிதான். ஐந்நூறுக்கும் ஆயிரத்துக்கும் வேலை பார்த்துட்டு இருந்த ஆள் நான். சொந்த தொழில் பண்ணலாம்னு அவங்க கொடுத்த ஐடியா என்னை மட்டுமல்ல, என் தலைமுறையையே தொழில்முனைவோரா ஆக்கியிருக்கு”
– தன் மனைவியை பெருமையுடன் அறிமுகம் ஜெகசாமியின் குரலில் நம்பிக்கையும் நெகிழ்ச்சியும் கலந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுந்தரி – ஜெகசாமி தம்பதியர், இன்று கடலை மிட்டாய் தொழிலில் தங்களின் வெற்றிக் கதையை எழுதி வருகிறார்கள். இந்த வெற்றியின் பின்னாலிருந்தது போராட்டமும், தைரியமான ஒரு முடிவும் தான்.

‘நாம சொந்தத் தொழில் பண்ணலாம்’
“எங்களுக்கு சொந்த ஊரு கீழஈரால் கிராமம். பொழப்புக்காக சென்னையில ஒரு கடலை மிட்டாய் நிறுவனத்துல வேலைபார்த்துட்டு இருந்தேன். ராப்பகலா உழைச்சாலும், கிடைச்ச வருமானம் போதுமானதா இல்ல. குழந்தைங்க படிப்பு, வீட்டு செலவுனு எதையுமே சமாளிக்க முடியல. குழந்தைகளோட சின்னச்சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை…‘ குழந்தைங்கிட்ட இது இப்போ தேவையா?’னு சொல்லி தள்ள வேண்டிய நிலைமை… ஆரம்பத்தில் பொருளாதார நெருக்கடியை உணர்ந்தேன். அப்புறம் அதுவே மனஅழுத்தமாக மாறுச்சு. என்ன பண்ணப்போறோம்னு பயந்து நின்ன நேரத்துல, ‘நாம சொந்தத் தொழில் பண்ணலாம்’னு தைரியமா சொன்னது என் மனைவிதான்.
நான் படிச்சது பத்தாவது, அவங்க எட்டாவது. ‘இந்தப் படிப்புக்கு சொந்தத் தொழில் எல்லாம் சரியா வருமா?’னு தயக்கமா இருந்துச்சு. ஆனா, அவங்க உறுதியா இருந்தாங்க. அந்த உறுதி எங்க வாழ்க்கையையே திருப்பி எழுதுச்சு”என்று ஜெகசாமி முடிக்க, கடலை மிட்டாய்களை பேக்கிங் செய்து கொண்டே பிசினஸ் ஆரம்பித்த விதம் பற்றி தொடர்கிறார் ஜெயசுந்தரி.

“எம்புட்டு சம்பாதிச்சாலும் பத்தலங்கிற சூழல்ல சென்னையில இருக்கப் பிடிக்காம சொந்த ஊருக்கே வந்துட்டோம். சென்னையில ஓடி ஓடி சம்பாதிக்கிற 50,000 ரூபாயைவிட, சொந்த ஊர்ல நிதானமா 30,000 ரூபா சம்பாதிச்சா போதும்னு தோணுச்சு. சொந்த ஊருக்கு வந்ததும் சொந்தமா தொழில் தொடங்க, பொட்டிக்கடை, காய்கறிக்கடை, துணி வியாபாரம்னு நிறைய யோசிச்சோம். அதுல எல்லாம் எங்களுக்கு முன் அனுபவம் இல்ல. ஆனா, இவருக்கு கடலை மிட்டாய் தயாரிப்புல அனுபவம் இருந்ததால அதையே பிசினஸா ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம்.
ஆரம்பத்துல அஞ்சு கிலோ கடலை வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களில் கடலை மிட்டாய் தயாரிச்சு பார்த்தோம். பதம் சரியா வந்துச்சு. அதனால பிசினஸ் சக்சஸ் ஆகும்னு நம்பிக்கை வந்துச்சு. சென்னையில இருந்த நண்பர்கள் மூலமா சின்னச்சின்ன கடைகளில் ஆர்டர்கள் கேட்டு வாங்குனோம். தெரிஞ்ச கடையில இவரு மேல இருந்த நம்பிக்கையில 20 கிலோ ஆர்டர் கொடுத்தாங்க” என்றவர் தன் பெருமையும் அடுத்தடுத்த நகர்வுகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“ஆர்டர்கள் வந்துருச்சு. ஆனா, பொருள் வாங்க கையில் காசு இல்ல. ‘கனவு மட்டும் போதுமா?’னு என் கணவர் மனசு உடைஞ்சு போயிட்டாரு. ஆனா, எங்க வாழ்க்கைக்காக என் தாலியை 35,000 ரூபாய்க்கு அடமானம் வெச்சேன். அந்தக் காசுல அடுப்பு, பாத்திரம், கடலை, வெல்லம் எல்லாம் வாங்கினோம். கடலைமிட்டாய் தயாரிச்சு, பேக்கிங் பண்ணோம். எங்க பிராண்டுக்கு வி.வி.என் – னு பேரு வெச்சோம்.
எங்க ஊர்ல இருந்து சென்னைக்கு கிளம்புற பஸ்ல கடலை மிட்டாய்களை கொடுத்துவிட்டோம். பஸ் டிரைவர்கிட்ட நம்பிக்கையா கொடுத்து அனுப்புறோம் அது பத்திரமா போய் சேருமானு காத்திருக்கும் அந்த நிமிஷங்கள் உயிரே கைல இல்லாத மாதிரி இருந்துச்சு. கடைக்காரங்க அந்தப் பொருளை வாங்கி, வியாபாரம் ஆனதும் காசு கொடுப்பாங்க. கூடவே ஆர்டர்களும் கொடுத்தாங்க. லாப பணத்தில் பொரி உருண்டை, எள்ளுமிட்டாய், அரைச்ச கடலை உருண்டைனு கடலை சார்ந்து விதவிதமான ஸ்நாக்ஸை அறிமுகம் பண்ணோம்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் எங்க பிசினஸ்ல இருந்து லாபத்தை எடுத்து செலவு பண்ணாம திரும்பவும் பிசினஸ்லேயே முதலீடு பண்ணோம். உணவு தரக்கட்டுப்பாடு துறையில் உரிமம் வாங்கி முறைப்படி பிசினஸை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினோம்.
ஆர்டர்கள் நிறைய வர வர, ஆள்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டோம். இப்போ எங்க நிறுவனத்துல 13 பேர்கிட்ட வேலை பார்க்கிறாங்க. ஆர்டர்கள் மூலமா ‘பவளம்’கிற மகளிர் குழு எங்களுக்கு அறிமுகமானாங்க.
எங்ககிட்ட இருந்து கடலைமிட்டாய்களை வாங்கி அவங்க குழுவோட லோகோ வெச்சு விற்பனை பண்ணிட்டிருந்தாங்க. நானும் அந்தக் குழுவுல உறுப்பினரா சேர்ந்தேன்.

குழு உறுப்பினர்களுக்கு அடுத்தக்கட்ட நகர்வு தேவைப்பட்டதால எங்களுடைய பிராண்டை குழுவின் பிராண்டா மாத்தி, ரெகுலரா அவங்களுக்கு நாங்க மிட்டாய் செஞ்சு தர்ற மாதிரி பேசிக்கிட்டோம். இப்போ குழு மூலமாதான் நாங்க விற்பனை பண்றோம். இன்னும் சில பிராண்டுகள் எங்ககிட்ட கடலை மிட்டாய் வாங்கி அவங்க பிராண்டு பேர்களில் விற்பனை பண்றாங்க”என்ற ஜெய சுந்தரியை தொடர்கிறார் ஜெகசாமி.
“இப்போ சிவகங்கை, திண்டுக்கல், தேனியில் உள்ள விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியா பொருள்கள் வாங்குறோம். ஒவ்வொரு மாசமும், 1,600 கிலோ கடலை, 600 கிலோ எள்ளு, 1,200 கிலோ வெல்லம் கொள்முதல் பண்றோம். கடலை கிலோ 160 ரூபாய்க்கும், எள்ளு – 170 ரூபாய்க்கும் எங்களுக்கு கிடைக்குது. முதல் தரத்தில் பொருள்கள் கிடைக்கிறதால மூட்டைகள் வந்ததும் வேலைகளை ஆரம்பிச்சுருவோம். சுத்தம் செய்யும் வேலைகள் எல்லாம் இருக்காது.

கடலை வாங்கிட்டு வந்து வறுத்து எடுக்கணும். கடலையில் மூக்கு மாதிரி ஒரு சிறு பகுதி இருக்கும். அதை தனியா பிரிச்சு எடுக்கணும். அப்புறம் வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுத்து, பாகை சற்று கட்டிப்பதமாக்கி கடலையில ஊத்தி ஸ்நாக்ஸ் தயாரிக்கணும். தரத்தையும் சுவையையும் நிரந்தரமாக்கிட்டா போதும். வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவாங்க.
இப்போ எங்க பிசினஸ்ல மெஷின்களும் அறிமுகம் செஞ்சுருக்கோம். அஞ்சு கிலோ கடலையில ஆரம்பிச்ச எங்களோட பயணம்…இன்று 500 கிலோ வரை வளர்ந்திருக்கு. மாசம் 14 லட்சம் டேர்ன் ஓவர் பண்றோம். எந்த தொழிலையும் சின்னதுனு நினைக்காதீங்க. தொழில் சின்னதோ, பெருசா உழைப்பு இருந்தா போதும், ஒரு சில வருஷத்துல லட்சத்தில் லாபம் பார்க்கலாம்.
ஒரு நல்ல வாழ்க்கைக்கு பெரிய முதலீடு தேவையில்லை…நம்பிக்கை கொடுக்கும் ஒருத்தர் இருந்தா போதும். எங்க வாழ்க்கை மாத்தியது தொழில் இல்ல…அந்த முடிவை எடுக்க தைரியம் கொடுத்த உறவு தான்” என்று தம்ஸ் அப் செய்து கெத்தாக விடைபெறுகிறார்கள்.