வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அடிக்கடி வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் ஒரு வயதான சிறுத்தை 18 வயது மாணவனை தாக்கி, எதிர்கொள்ளலில் தோற்று இருக்கிறது. அங்குள்ள சர்லி என்ற கிராமத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. ஐ.டி.ஐ படிக்கும் பிரவேஷ் சர்மா(18) என்பவர் காலை 7 மணி அளவில் பால் வாங்கச் சென்றபோது ஒரு சிறுத்தை அவரைத் தாக்கியது. உடனே சுதாரித்துக்கொண்ட சர்மா, சிறுத்தை எதிர்த்துப் போரிட்டார்.
இருவருக்கும் சுமார் 10-12 நிமிடங்கள் சண்டை நடந்தது. இதில் சிறுத்தையுடன் போராடிய பிரவேஷ், அதன் தாடைகளைப் பிடித்து நெரித்துக் கொன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக பிரவேஷிற்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை தாக்கிய சிறுத்தைக்கு ஒரு வயதே ஆகிறது. இதனால் அதன் தாக்குதல் வேகம் குறைவாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாணவரின் மருத்துவ செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் கடந்த மார்ச் 6ம் தேதியிலிருந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறியும், வனத்துறை கூண்டு வைக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையை எதிர்த்து போராடிய சிறுவனை கிராம மக்களும், அவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில் உள்ளவர்களும் பாராட்டி வருகின்றனர். காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் மனிதக் குடியிருப்புகளை நோக்கி இடம்பெயர்கின்றன. வழக்கமாக இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தைகள், இப்போது அதிகாலையிலேயே தாக்கத் தொடங்குவது அவற்றின் உணவு தேடல் தீவிரம் அடைந்திருப்பதை காட்டுகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி ஹிமாச்சல பிரதேசத்தில் 510 சிறுத்தைகளும், 529 கரடிகளும் இருக்கின்றன. இதில் 30.85% மனித-விலங்கு மோதல்களுக்குச் சிறுத்தைகளே முக்கியக் காரணம் ஆகும். 83% தாக்குதல்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மீதே நடக்கின்றன. குல்லு, சம்பா, மண்டி போன்ற மாவட்டங்களில் இந்த மோதல் மிக அதிகமாக உள்ளது.