திடீரென வந்த கும்பல்: முதல் மாடியிலிருந்து குதித்து தப்பிய ஜோடி! – உ.பி-யில் தொடரும் அவலம்!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இரண்டு மாடி பீசா உணவகம் அமைந்திருக்கிறது. இந்த உணவகத்துக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த ஒரு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்தத் தம்பதியினரைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் யார், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தம்பதியினரின் அனுமதியின்றி அவர்களைத் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த அந்த இருவரும், அந்தச் சூழலை தவிர்க்கவும், அவர்களிடமிருந்து விடுபடவும் முயன்றனர். ஆனால், அதற்கான சூழல் அங்கே இல்லை என்பதால், அச்சம் மிகுதியில், அந்த உணவகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் கீழே விழுந்த பெண்ணுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வருகிறது. மேலும், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில், கடந்த ஜனவரி 13-ம் தேதி இரு மதத்தைச் சேர்ந்த தம்பதியின், சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போதும் இதுபோன்ற சில வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஒரு கும்பல் மண்டபத்திற்குள் புகுந்தது. அவர்கள் இந்தத் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த குண்டர்களின் அத்துமீறிய, அநாகரீக செயலால் அந்த வரவேற்பு நிகழ்ச்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

கடந்த மாத இறுதியில் ஹோட்டலில் நர்சிங் மாணவியின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது “லவ் ஜிகாத்’’ நடப்பதாக கூறி ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த `பஜ்ரங் தள்’ அமைப்பினர், இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கினர்.

இந்த விவகாரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த மாணவி, “பிறந்தநாளையே சிதைத்துவிட்டார்கள். என் நண்பர்கள் அனைவரையும் அழைத்தேன். அதில் ஏராளமானோர் இந்துக்கள்; இருவர் மட்டுமே இஸ்லாமியர்கள். லவ் ஜிகாத் இல்லை. வலதுசாரி அமைப்பினர் என் வீடியோக்களை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர்” எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *