கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்பது அண்டை மாநிலங்களில்கூட இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகிறவர்கள்கூட அவர்களுடைய மாநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் எனப் பத்து மாநிலங்களில் உரிமைத்தொகை. மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது.

இந்த ஆயிரம் ரூபாய் என்பது வெறும் தொடக்க மட்டும் தான். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 13,75,492 சகோதரிகளுக்கு மாதந்தோறும் இதுவரை 28,000 ரூபாய் வழங்கியிருக்கிறோம்.
எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மக்களிடம் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தேன். இன்று காலை 16,94,339 பேருக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் போட்டு விட்டோம்.
இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கின்ற 1,30,69,839 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கிடைக்கும்.

தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்த நடை போட நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும்.
எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது என்றுதான் எழுதுவார்கள் என்று உறுதியாக சொல்கிறேன்.
இந்த உரிமைத்தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல உங்களின் பிள்ளைகள் கல்விக்கும் பயன்படும். கல்விதான் சிறந்த முதலீடு யாராலும் அழிக்க முடியாத சொத்து.
தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் அவசியம். நீங்கள் முன்னேறி வந்து சிறகடித்து பறக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும். அதற்கு உங்களின் சகோதரனாக, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன்” என்று கூறினார்.