விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது.
அதையடுத்து தீர்த்தங்குளம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு `முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்” என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 5-ம் தேதி காணொளி வாயிலாக அந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, `இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பழைய பெயரையே வைக்க வேண்டும்’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பெயரே தொடர வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தினர்.