திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.எம்.டி.சி காலனி அருகே வந்தபோது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று ஜேசுராஜ் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி ஜேசுராஜ் கீழே விழுந்தபோது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென அவரை கத்திகளால் தாக்கினர். இதனால் உயிருக்குப் பயந்து சாலையில் ஓடினார். கொலை வெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று வாளால் வெட்டி தலையைச் சிதைத்தனர். இதனால் உயிருக்குப் போராடிய நிலையில் ஜேசுராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து கொலைவெறி அடங்காத கும்பல் யாகப்பன்பட்டியில் உள்ள அவரது இரண்டாவது மனைவி தீபிகாவையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வெட்டி படுகொலை செய்தனர். இதை தடுக்க சென்ற அவரது மகனுக்கும், உறவினர் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சரிந்து விழுந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர்.