சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று (பிப்.9) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 16 கி.மீ ஆழத்தில் இன்று (பிப்.9) மதியம் 1 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 4.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்கானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் அப்பகுதிகளில் உண்டாகும் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இதையும் படிக்க: சீன நிலச்சரிவில் 28 பேர் மாயம்! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
முன்னதாக, கடந்த பிப்.2 அன்று திபெத்தின் ஓர் பகுதியில் சுமார் 5 கி.மீ. ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான அதே நாளில் அந்நாட்டின் மற்றொரு பகுதியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .