“திமுகவினர் ரத்தம் சிந்தி உழைத்ததால்தான் நீங்கள் எம்.பி…” – சு.வெங்கடேசன் மீது மேயர், கவுன்சிலர்கள் கொந்தளிப்பு | Madurai Mayor, DMK Councillors Dissatisfaction at Madurai MP Su.Venkatesan

1371216
Spread the love

மதுரை: திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகி யுள்ளார் என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சி கவுன்சிலர்களும் கொந்தளித்தனர்.

இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம்பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநாகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குழுத் தலைவர் மா.ஜெயராமன் பேசும்போது, “தூய்மை நகரங்கள் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. கீழடி ஆய்வை மதிக்காத மத்திய அரசின் அறிக்கையை நாம் ஏன் மதிக்க வேண்டும். பல லட்சம் பேர் பங்கேற்ற சித்திரைத் திருவிழா, திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் மாநகராட்சி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

நாடு முழுவதும் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இதை அறியாமல், திமுக கூட்டணியில் இருந்துகொண்டே எம்.பி. சு.வெங்கடேசன் மதுரையை குப்பை மாநகராட்சி என்று பொதுவெளியில் இழிவாகப் பேசியது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக தொண்டர்கள் ரத்தமும், வேர்வையும் சிந்தி உழைத்ததால்தான் அவர் இன்று எம்.பி.யாக டெல்லி சென்று வருகிறார். மக்களவையில் பாஜக எதிர்ப்பு தவிர, மதுரை மக்கள் பிரச்சினைகளை அவர் என்றாவது பேசியுள்ளாரா?” என்றார்.

அதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜன், “தவறாக திரித்து சொல்ல வேண்டாம். தனிப்பட்ட முறையில் எம்.பி. மீது விமர்சனமோ, விரோதமோ கொள்ள வேண்டாம். அவரது நிதியில் ஒவ்வொரு வார்டிலும் வேலை நடந்துள்ளது” என்றார்.

மேயர் இந்திராணி “எம்.பி. சு.வெங்கடேசன் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. ஒட்டுமொத்த தமிழக நகரங்களையும், மத்திய அரசு தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளிய நிலையில், மதுரை மாநகராட்சியை பற்றி மட்டும் அவர் விமர்சனம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகளின் உழைப்பு மக்களுக்கு தெரியும். அவருக்குத் தெரியாமல் போனதுதான் வருத்தம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் விஜயா, “பட்டிமன்றம் மாதிரி பதிலுக்கு பதில் பேசக்கூடாது. எம்.பி. சொன்ன தகவலை முழுமையாக புரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல், “நாங்கள் அதிமுகவுக்கு எதிராக குரல் எழுப்பவே வந்தோம். ஆனால் திசை மாறி, கடைசியில் உங்களுக்கு எதிராகவும் எங்களை பேச வைத்துவிட்டீர்கள்.

எம்.பி. டெல்லி செல்வதற்கு வியர்வை சிந்தி உழைத்ததாக திமுக கவுன்சிலர் ஜெயராமன் கூறினார். நீங்கள் கொடுத்த 2 சீட்டுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும், தமிழகம் முழுவதும் உங்கள் வெற்றிக்காக உழைத்துள்ளனர். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கூட்டணி இருந்தால்தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியும், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இருக்கை அருகே சென்று, அவர்களுக்கு எதிராக திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *